யாழ்நகர் சென்று வந்தேன், அவலக்கதை கேட்டு நொந்தேன்;
நல்லூரில் ஆண்ட சங்கிலியன் சந்தியில் நின்றான்;
எல்லாளனோ கல்லாய் நின்றான்;
அடிமையாக வாழவில்லை தமிழன், சீவிக்கிறான் என்றனர்,
எதற்கும் முள்ளிவாய்க்கால் சென்றுவா என்றனர்;
முல்லைக்கு ஓடிச்சென்றேன், முள்ளிவாய்க்கால் பார்த்து நின்றேன்;
தமிழன் செங்குருதி ஆறாய் பாய்ந்த இடம்,
இரத்த மணம் வீசியது தென்றலுக்குப்பதில்;
வெந்தேன், வெதும்பினேன், வேதனையை தாங்கி நின்றேன்;
கதிகலங்கி, மதிமயங்கி கண்ணீர் மல்க விறைத்து நின்றேன்;
ஈழத்தை காத்த மேதகுவும் அங்கே, அவனைக்காத்த மாவீரரும் அங்கே
கோரமாய் மாண்டு மடிந்த இடம்;
நெஞ்சில் பயம் பெருக, இதயம் கொதித்தெழும்ப, பார்த்து நின்றேன் செய்வதறியாது;
ராணுவ நிலையம் ஒரு பக்கம், அதில் ஆயுதம் ஏந்திய கொடூர கொலை பாதகர் போர்க்கோலத்தில் நிற்க;
வாகனங்களும் நிற்கவில்லை, துவிச்சக்கர வண்டிகளும் நிற்கவில்லை
நடந்து வந்தவர் விரைந்து மறைந்தனர்;
சென்றேன் சிறுதூரம், கேட்டறிந்தேன் கோரக்கதை;
வானம் குண்டு மழை பொழிய, எட்டுத்திக்கிலுமிருந்து பீரங்கிகள் முழங்க,
பச்சிளம் பாலகரும், பஞ்சான வயோதிபரும், கற்பிணிப்பெண்களும்,
சிற்றார் சிறுமியரும், சிதறி மடிய கரைபுரண்டோடியது தமிழனின் செங்குருதி ஆறாக.
செஞ்சிலுவை குறித்த, ஆலயங்களென்ன, வைத்தியசாலைகளென்ன,
பள்ளிக்கூடங்களளென்ன, அனைத்தும் குண்டுக்குப்பலியாக,
தேசக்காவலர் தமிழ்த்தேசத்தை அழிக்க, நகர் காவலர் தமிழ் மக்களை ஒடுக்க;
இளைஞரை கைகட்டிச்சுட்டனர், இளம் யுவதியரை கெடுத்துக்கொன்றனர்,
யாருமே மிஞ்சவில்லை.
ஈரைந்து மாதங்கள் மடி சுமந்து, தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளைகளை கயவரிடம் பறிகொடுத்த தாயின் வேதனை உணர்ந்தேன், தேடுகிறாள் பிள்ளைகளை இன்றும்;
வேதனையில் வதங்கி, வெம்பி, கண்ணீர் மல்கத்துடித்துநின்றேன் பிரிவை தாங்காது;
மானிட கோரத்தின் உச்சம் உணர்ந்தேன், மனிதநேயத்தின் வரம்பை அறிந்தேன்;
மனதில் கோரம், தூண்டியது மனம் வஞ்சம் தீர்க்க, தடுத்தது மதி;
ஈழ்த்தழர் மாண்டு மடிகையில் அயல் நாடுகள் எங்கே, சர்வதேசம் எங்கே, ஐக்கிய நாடுகள் எங்கே, மனித உரிமை எங்கே, மானிட நேயமெங்கே?
மறைந்ததோ நீதி, ஒழிந்ததோ சட்டம்? யாவரும் கைவிட்டனர் ஈழத்தமிழனை மாண்டு மடியென்று;
கடினம் கடினம் ஈழத்தமிழனாய் வாழ்வது கடினம்,
அதிலும், அடங்கி ஒடுங்கி முல்லையில் வாழ்வது கடினம்;
இதைவிடக்கடினம் கூன் குருடு ஆக்காமல் நடைப்பிணமை வாழ்வதே.
உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை மறக்கவில்லையே நாம்;
வாழநினைத்தால் அலைகடலும் சோலையாகும்.
எம்மக்கள் மடியலாம், ஈழத்தமிழனின் வீரம் மடியாதே என்றும் முழைத்துவரும் உலகில் உயிரினம் இருக்கும் வரை;
தமிழர்களாக வாழ்ந்தோம், வீரர்களாக வளர்ந்தோம்,
அவதார புருஷர்களாக யாவரும் வீறுகொண்டால் மீட்கலாம் நம் நாட்டை, காக்கலாம் நம் மக்களை;
எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.