வரலாற்றுரீதியாக தனித்துவமான தமிழ் மற்றும் சிங்கள இராட்சியங்களைக் கொண்டமைந்த இலங்கைத் தீவானது, காலனித்துவ ஆக்கிரமிப்பின்போது ஒற்றை நிர்வாக அலகுக்குள் கொண்டுவரப்பட்டது. சுதந்திரத்திற்கான இயக்கத்தின் முன்னணியில் சிங்களத் தலைவர்களின் தோளோடு தோள்நின்று தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் செயற்பட்டிருந்தபோதும், சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையிலே அடுத்தடுத்துவந்த அரசுகள் ஏற்படுத்திய கட்டமைப்புரீதியானதும் அரசமைப்புச்சட்டரீதியானதுமான பொறிமுறைகள் நாட்டின் பௌத்தசிங்களப் பெரும்பான்மையினருக்கு பெரிதும் சாதகமானவையாகவும் அவர்களின் நலமுன்னேற்றத்தைக் குறிவைப்பதாகவுமே இருந்தன. தனிச்சிங்களச் சட்டமூலம் சிங்களமொழிக்குச் சிறப்புரிமை வழங்கப்பட்டு, பௌத்த மதத்திற்கு அரசமைப்புச்சட்டத்திலே முக்கிய இடம் வழங்கப்பட்டு, அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் தாயகப்பகுதி அபகரிக்கப்பட்டது. கல்விக்கும், தொழிலுக்கும், பொருளாதாரா முன்னேற்றத்திற்குமான சம வாய்ப்புகள் தமிழருக்கு மறுக்கப்பட்டன. 1950ளில் இருந்து தொடர்நிகழ்வுகளாக இருந்துவந்த தமிழருக்கெதிரான வன்முறைத்தாக்குதல்கள், 1983லே அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்களின் இறப்புக்கும், பலர் காயப்படுவதற்கும், தமிழர் வணிகநிறுவனங்களும் வாழ்விடங்களும் தீக்கிரையாக்கப்படுவதற்கும், தங்கள் உயிருக்குப்பயந்து பெருந்தொகையான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் காரணமாயமைந்த கறுப்பு ஜூலை இனவழிப்பிலே உச்சம்பெற்றன. மேலும், 1981ல், பண்பாட்டு இனவழிப்பின் ஒரு அங்கமாக வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த யாழ் பொது நூலகம் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.
தமிழர்களின் நான்கு தசாப்தகால அகிம்சைவழி எதிர்ப்புப்போராட்டத்தாலும், தமிழர்கள் எதிர்கொண்ட அரசியற் சிக்கல்களையும் ஒடுக்குமுறைகளையும் தீர்க்கவென அடுத்தடுத்துவந்த இலங்கை அரசுகளுடன் தமிழ்த் தலைவர்கள் ஒத்துழைத்தமையாலும் குறைந்த பட்சத் தீர்வுகளைக்கூட எட்டமுடியாதுபோக, இந்நிலை ஆயுதப்போராட்டத்திற்கு வழிசமைத்து, தொடர்ந்து இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற உள்நாட்டுப்போராகப் பரிணமித்தது. 2009லே இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்திலே அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களும் பாரதூரமாக மீறப்பட்டுள்ளபோதும் அவற்றுக்கான எந்த வகையான பொறுப்புக்கூறல்களோ நீதியோ இதுவரை வழங்கப்படவில்லை. மாறாக, நாட்டின் தண்டனைப்பயமற்று இயங்கும் நிலமையானது, போர்க்குற்றங்களில் ஈடுபட்டாரென ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்படும் லெப்டினன் ஜெனரல் ஷெவேந்திரா சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படும் நிலைக்கு அடியிட்டுள்ளது. 2009ன் சனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையிலே மட்டும் 140,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது. வைத்தியாசாலைகளையும், ஐக்கிய நாடுகளின் பணிமனைகளையும், உணவு விநியோக நிலையங்களையும் கொண்டிருந்ததோடல்லாமல் மக்கள் பாதுகாப்புக்காக நாடிச் செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வலயங்கள்மீது அரச படையினர் பலமுறைகள் ஏறிகணைத் தாக்குதல் நடத்தினர். பெருமெண்ணிக்கையிலான மக்கள் சட்டரீதியான காரணமெதுவுமின்றிக் காணாமலாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும், சித்திரவதைசெய்யப்படுவதும், பாலின மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளும், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளும் போரின்போதும் நடந்தன போரின் பின்னரும் தொடர்கின்றன. 2015லே தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய ஐக்கிய அரசு நிலைமாறு நீதியை முன்னெடுக்கப்போவதாக உறுதிவழங்கியபோதும், அந்த உறுதிமொழியை அது காப்பாற்றவில்லை
தற்போதைய இலங்கை அரசின் தலைவர்களாக விளங்கும் ஜனாதிபதி கோத்பாய இராஜபக்ச, பிரதம மந்திரி மகிந்த இராஜபக்ச இருவருமே 2009ன் இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்கள். ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, 2015லே இணைந்து கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் உட்பட்ட அனைத்து அனைத்துலக உடன்படிக்கைகளிலிருந்தும் இலங்கையை வெளியேற்றியுள்ளதோடு, ‘போரின் வீரர்கள்’ பாதுகாக்கப்படுவார்கள் என்றும் பகிரங்கமாக உறுதிவழங்கியுள்ளார். தற்போதைய அரசின்கீழ் வடக்கு இராணுவமயப்படுத்தப்படுவது தொடர்வது மட்டுமன்றி, கோவிட் 19கு எதிரான ஏற்பாடுகள் என்ற போர்வையிலே அது மேலும் முனைப்புப் படுத்தப்பட்டுள்ளது. நினைவேந்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான தொந்தரவுகளும் அச்சுறுத்தல்களும் தொடர்வதோடு, மாற்றுக்கருத்தாளர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. உள்நாட்டு அமைப்புக்களினாலும் அனைத்துலக குமுகத்தாலும் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் பற்றிய கருத்தாடல்களும், பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளும், தற்போதைய அரசால் மேற்குலகக் கோட்பாடுகளாகவும் ஆதிக்க சக்திகளின் இடையூறாகவும் சித்தரிக்கப்பட்டு, தேசியவாதம் தேசபக்தி என்ற போலியான போர்வையின்கீழ் நாட்டின் பெரும்பான்மையினரிடம் ஆதரவைத்திரட்டி நாட்டை மேலும் பிளவுபடுத்தவே பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது இலங்கையின் பல்லின பல்சமய நிதர்சனத்தை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கிறது.
மேலும், போர் முடிவடைந்தபின், முஸ்லிம் குமுகத்தினர் வலதுசாரி பௌத்த-சிங்களத் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டு இனக்கலவரங்களுக்கும், 2019ன் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகளின் பின்னான சட்டத்திற்குப் புறம்பான தடுப்புக்காவல்களுக்கும், தீவிரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். ஏனைய சிறுபான்மை மதத்தவர்களும், பால்விநோதர் மற்றும் தற்பாலினர் குமுகங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்தும் அரசால் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன் ஒடுக்கப்பட்டும் வருகின்றனர்.