இலங்கையிலுள்ள வழக்கறிஞர்களையும் சட்டவல்லுனர்களையும் கலந்தாலோசித்து, அவர்களின் பங்களிப்புடன், பொதுமக்கள் சுதந்திரங்களுக்கான சங்கமொன்றை உருவாக்க தமிழர் உரிமைகளுக்கான குழுமம் விழைகிறது. பக்கச்சார்பற்ற இந்தச் சங்கமானது நாடுதழுவிய வகையிலே சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும், இனக்குழுமங்களுக்கான நீதியைப்பெறவும், தமிழரையும் ஏனைய சிறுபான்மையினரையும் பாரபட்சமாக நடத்தும் சட்டங்களையும் அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களையும் எதிர்க்கவும், அரசாலும் இராணுவத்தாலும் காவற்துறையாலும் அதிகாரத்துர்ப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கவுமென உழைக்கும். இந்தச் சங்கமானது காணி உரிமைகள், மனித உரிமைகளும் அடிப்படையுரிமைகளும், பெண்கள், குழந்தைகள், பால்விநோதர் மற்றும் தற்பாலினர் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களின் உரிமைகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சாதிய ஒடுக்குமுறை, சொத்துத் தகராறுகள், அதிகார துர்ப்பிரயோகம் ஆகிய விடங்களிலே சிறப்பாகக் கவனம் செலுத்தும்.
இலங்கையின் காலனித்துவத்திற்குப் பின்னான வரலாறானது தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட இனவழிப்பு, இன மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட ஒடுக்குமுறைகள், எந்தவிதமான மாற்றுக்கருத்துகளும் அடக்கப்படுதல் மற்றும் மௌனிக்கப்படுதல், ஊடகச்சுதந்திரத்திற்கெதிரான கெடுபிடிகள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், ‘வெள்ளை-வான்’ சம்பவங்கள்போன்ற ஆட்கடத்தல்கள், சட்டத்தை மீறிய கைதுகளும் தடுப்புக்காவல்களும், சித்திரவதைகள், அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்பேணவென அரசமைப்புச் சட்டமும் நீதித்துறையும் தவறாகக் கையாளப்படல் ஆகிய விடயங்களால் களங்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு அதிகாரத்திற்கு வந்ததுமுதல், பொதுமக்கள்சார் அரசியற்செயற்பாடுகளுக்கான வெளி வேகமாகச் சுருங்கிவருகிறது; ஊடகவியலாளர்கள் மீதானதும் ஏனைய செயற்பாட்டாளர்கள் மீதானதுமான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன; இராணுவமயமாக்கலும் காவற்துறையின் மிருகத்தனமும் பன்மடங்காகியுள்ளன.
இந்த வகையிலே, மக்களின் உரிமைகளுக்கான – குறிப்பாக பலதசாப்பதங்களாக தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடிவரும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான - பாதுகாப்பை முன்னெடுக்கவும் அவற்றைத் தற்காக்கவும் என, கட்டமைப்பிலும் அரசியலமைப்பிலும் பாரபட்சமின்மையையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக முன்னேற்பாட்டுடன் இயங்கவல்ல ஒரு பொதுமக்கள் சுதந்திரங்களுக்கான சங்கம் உருவாக்கப்படுவது முக்கியமானது. மக்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் பற்றியும் அரசியல் உரிமைகள் பற்றியும் அறிவுபுகட்டி, அதன்மூலம் அரசாங்கமும், ஆயுதப்படைகளும், காவற்படையும் தங்கள் செயல்களுக்குப் பொறுப்புக்கூறும் வகைசெய்வதிலும் இந்தச் சங்கம் கவனம்செலுத்தும்.
பொதுமக்கள் தமது உரிமைகளைத் தற்காத்து நீதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சட்ட உதவிகளை அவர்களுக்கு இலகுவாகக்கிடைக்கச் செய்வதற்கான வாயப்புகளைப் பொதுமக்கள் சுதந்திரங்களுக்கான சங்கம் ஏற்படுத்திக்கொடுக்கும். குமுகங்கள் கலந்துரையாடி, செயற்பட்டு, அரசியற் தீர்வுகளை எட்டுவதற்கான பொதுவெளியாகவும் சங்கம் விளங்கும்.