உடனடி வெளியீட்டுக்கு
14 தை 2021
மார்க்கம், கனடா – தமிழர்கள் இயற்கையுடன் வாழ்ந்து இயற்கையை அனுசரித்து இயற்கையின் கன்னித் தன்மையை பாதுகாத்து, எமது நாட்டு காளைகளை பயன்படுத்தி பாரம்பரிய நெல்விதைகளை விதைத்து அதனை அறுவடை செய்து முதலில் சூரிய தேவனுக்கு படைத்து உண்பது இந்த பிரபஞ்சத்தை தமிழன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான் என்பதுடன் தைத்திருநாளை தன் புத்தாண்டாக கொண்டாடுவதுடன் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று கூறுவதன் மூலம் உலகத்துக்கே தன்னம்பிக்கை ஊட்டுகிறான்.
இந்த தமிழ் புத்தாண்டு எமக்கு எமது விடிவுக்கு நல்ல சேதிகளை தந்து களம், புலம், அனைத்துலகம் குறிப்பாக தமிழகம் உட்பட சர்வதேசத்தை இணைத்து நடத்தும் எமது பயணம் அடிவானத்திலிருந்து ஆதவன் தன் கதிர்களை பரப்பி உலாவர ஆரம்பிப்பது போல் எமது நீதியான கௌரவமான தீர்வை நோக்கிய ஒளிக்கீற்றுகளும் தென்பட ஆரம்பித்துள்ளது.
தமிழர் உரிமைக்கான குழுமம் உலகம் முழுமையும் உள்ள சகல தமிழர், தமிழரல்லாத அமைப்புகளுடனும் இணைந்து பயணித்து எமது விடிவை நிஜமாக்குவோம் என உறுதி கூறுவதுடன் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் தமிழருக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமுடைய சகல தரப்புகளுடனும் உறவை பலப்படுத்துவதுடன் ஏனைய இனங்களின் விடிவும் தமிழரது விடிவிலேயே தங்கியுள்ளது என்பதை இனங்களுக்கு உணர்த்துவதுடன் அந்தந்த இனங்களும் உணர்ந்து செயல்படுவார்கள் என திடமாக நம்புகிறோம். அத்துடன் இந்த தமிழ்ப் புத்தாண்டு தமிழர் அனைவரையும் இணைக்கட்டும்.
தமிழர் உரிமைக்கான குழுமத்துக்கு கிடைக்கும் சர்வதேச ஆதரவை பயன்படுத்தி ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணில் தங்கள் விடயங்களை தாங்களே தீர்மானித்து வாழ உதவுவோம் என் உறுதி பூணுவோம்.
எமது விடுதலை எமது கையில்!
____
கற்பனா நாகேந்திரா, செயலாளரும் பேச்சாளரும்
[email protected] | + 1 (778) 870-5824