மே 4, 2021
திரு மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
எண். 25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை
அல்வார்ப்பெட், சென்னை 600 018
தமிழக முதல்வர் மதிப்புக்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம் முதல்வர்.
உங்களின் அபார வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதோடு ஒரு சிறந்த மனிதரை தமது தலைவராக தெரிவு செய்ததற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு எமது பாராட்டுகள். பாரிய துயரமான கட்டத்திலும், எங்களுக்கு நம்பிக்கை பிறப்புக்கு காரணமான இந்த சரித்திரம் படைத்த நிகழ்வு, விடிவை நோக்கி பயணிக்கும் வலுவான உற்சாகத்தில் எங்களை மூழ்கடித்துள்ளது.
உங்களுடைய தந்தை கலைஞருக்கு தமிழ் ஈழம் அவர் இதயத்தில் குடியிருந்தது. தொப்புள் கொடி உறவு என்று எம்முடன் சொந்தம் கொண்டாடினார். உங்கள் தந்தையின் பிரிவில் அனாதையாக்கபட்ட எமக்கு, உங்கள் உதயம் புது நம்பிக்கையை தந்துள்ளது. உங்களால் உருவான சூரிய வெளிச்சம், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, தமிழீழ மக்களுக்கும் ஒரு விடிவை பெற்றுத்தரும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.
உங்கள் தந்தை கலைஞருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி, ஏனோ தானோ என 17-5-2009 வரை இழுத்தடித்து இன அழிவை சூழ்ச்சிகரமாக நிறைவேற்றியது. அனால், இன்று சர்வதேச நீதி விசாரணையில் இருந்து தப்ப முடியாத வண்ணம், ஸ்ரீலங்கா அரசு சர்வதேச மனித விரோத குற்றங்களுக்கும், இனப்படுகொலைக் குற்றங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துள்ளது. நீதிக்கும், அநீதிக்கும் இடையில் தொடர்ந்தும் இந்திய அரசு நடுநிலை வைக்கமுடியாத நிற்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா அரசின் இராஜதந்திர சதிவலைக்குள் மாண்டு போகாமல், எங்கள் நீதிப் பயணத்தில் இந்தியாவை வழி நடத்துவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.
இன்று அரசியல் கட்சிகளுக்கும், குடிசார்பு அமைப்புகளுக்கும் இடையே உருவாகியுள்ள ஒற்றுமை பயணம், ஒரு உரிமைக்குரலாக மேலும் பலமடைய உங்களை நாடிவந்த சகல அகில இலங்கை தமிழ் சக்திகளையும் விரைவில் ஒருமுகப்படுத்தி ஒரு வேலைத்திட்டத்தில் உள்வாங்க வேண்டி நிற்கின்றோம். சீன அரசின் அத்துமீறிய ஆக்கிரமிப்பும், ஸ்ரீலங்கா அரசின் ஆக்கிரமிப்பும் இணைந்து தமிழீழ மக்களை மாத்திரமல்ல, தமிழக மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அன்று Tamil Eelam Solidarity Organisation மூலம் 1986யில் கலைஞர் இந்தியாவில் எடுத்த முயற்சி முழுமையாக வெற்றி பெற நீங்கள் உழைப்பீர்கள் என நம்புகின்றோம். மத்திய அரசை வெல்லுவதற்கு முன் நிபந்தனையாக கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழ் நாட்டு சகல அரசியல் கட்சிகளின் ஆதரவையும், நாடு தழுவிய ஆதரவையும் முறைப்படி திரட்ட வேண்டியுள்ளது. திமுக அரசியல் விஞ்ஞாபனம் இனப்படுகொலை வேலைத்திட்டத்துக்கு நன்கு சான்று பகர்கின்றது. சட்டசபையில் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களையும் நீங்கள் இந்த காலகட்டத்தில் நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். ஐக்கிய நாடு மனித உரிமை ஆணையாளர் செப்டம்பர் 09/2022 க்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய 46/1 தீர்மானத்துக்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப் படுகின்றது.
மீண்டும், திமுகவின் தேர்தல் வெற்றிக்கு தலைமை தாங்கிய உங்களுக்கு தமிழர் உரிமைக்கான குழுமம் நன்றி கூறி விடை பெறுகின்றோம்.
நவரத்தினம் ஸ்ரீநாராயணதாஸ்
தலைவர், தமிழர் உரிமைக்கான குழுமம்