1 தை 2053
January 14, 2022
பொங்கலோ பொங்கலென அனைவரையும் இதயமுற வாழ்த்துவது தமிழரின் மரபன்றோ
ஆதிபகவன் அருள்கொடுக்க
ஆதவன் கண்விழிக்க
ஆலயமணி ஓசையிட
கொட்டுமேளம் ஒலிபரப்ப
நாதசுரம் இசைமீட்க
பொங்குதமிழ் பொங்கிவர
தித்திக்கும் தமிழ் பாடி
மங்கையர் பூச்சூடி பாதகடகம்
கணகணக்க முத்தம்
கூட்டிக்கோலமிட்டு
மங்களகரமாய் புன்னகைபூத்து
பொங்கலோ பொங்கலென
இசைபாட, கோமாதா பால்கொடுக்க,
தேன்கரும்பு சாற்றுடனே
சர்க்கரைப்பொங்கல் பொங்கி வடிய
சொல்லால் ஒன்றிணைந்து
வாழ்வுண்டு வளமுண்டு வாழ்விலே
ஒருங்கிணைந்து நலமுடனே வாழ்க
நாசுவைக்க வாழ்த்துப்பாடி வாழ்கிறான் தமிழன்.
தாய்த்தமிழின் முதல் நாளாம்
செந்தமிழின் திருநாளாம்
உழவரின் பெருநாளாம்
தைத்திருநாளாம்
தைப்பொங்கலென நாம் அனுபவிக்க
எம்மக்கள் துன்பத்தில் ஓலமிட
இன்பத்தில் மூழ்குவதா வேதனையில் வதங்குவதா?
தந்தை மாண்டான்
கணவன் மறைந்தான்
பெற்றமக்களையும் தேடி அலைகின்றாள் ஈழ்த்தாய்.
தாயை இழந்தோம்
தந்தையை தொலைத்தோம்,
அண்ணன் எங்கே தம்பி எங்கே
பெற்ற மக்களையும் தேடுகின்றோம்.
கிடைக்கவில்லையே!
காலனிடம் சென்றனரா, கயவரிடம் மாண்டனரா யாரறிவார்.
வீரமிகு தமிழனின் விதி இதுதானா?
பொங்கல் பெருநாளில் இன்பத்தில் துன்பமா
துன்பத்திலும் இன்பமா
இதுவோ ஈழத்தமிழனின் நியதி?
எனினும்; பொங்கு தமிழ் தலையோங்க
யாமெல்லோரும் தலைநிமிர்ந்து
பொங்கலோ பொங்கலென
அனைவரையும் வாழ்த்தி வாழவைப்போம்,
துன்பத்தில் நின்று மீழ வைப்போம் என சட்டப்போர்முரசு கொட்டுவோம்.
இதுவே தமிழர் உரிமைக்கான குழுமத்தின் முழுமூச்சு.