அனைத்துலக சட்ட ஆட்சி மூலமாகவும் சட்டப்போர் மூலமாகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கான நிலைமாறு நீதியைப் பெற்றுக்கொள்வதே தமிழர் உரிமைக்கான குழுமத்தின் மிக முக்கியமான குறிக்கோளாகும். குறைந்தபட்சம், 1983ன் தமிழருக்கெதிரான வன்முறையிலே ஆரம்பித்து, 2009லே முள்ளிவாய்க்காலிலே – பெண்கள், குழந்தைகள், ஆயுதமின்றிச் சரணடைந்த போராளிகள் உட்பட்ட 140,000க்கும் மேற்பட்ட மக்களின் படுகொலையுடன் - உச்சம்பெற்ற தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதற்கென சட்டப்பொறிமுறைகளைக் கையாளும் மிகச்சக்திவாய்ந்த ஆயுதமாக சட்டப்போரை தமிழர் உரிமைகளுக்கான குழுமம் கருதுகிறது. போரின் இறுதிக்கட்டத்திலே பாரிய மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும், மானிடத்திற்கெதிரான குற்றங்களும் இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும் அவர்கள் அவற்றுக்கான தண்டனைப்பயமற்றிருப்பதோடு தற்போதைய இலங்கை அரசால் பாதுகாக்கவும்படுகிறார்கள். 2015லே இணைந்து கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச ஒருதலைப்பட்சமாக வெளியேறியதன்மூலம் நிலைமாறு நீதி தொடர்பில் எய்தப்பட்ட மிகச்சிறிய முன்னேற்றங்கள்கூட மீண்டும் பின்னடைவு கண்டுள்ளன.
பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறைகளை ஏற்படுத்தும் கடமையிலிருந்து இலங்கை அரசானது பலதசாப்தங்களாக மீண்டும் மீண்டும் தவறிவந்துள்ளது. நாட்டின் நீதித்துறைகூட நீதியையும், சட்ட ஒழுங்கையும் நிலைநாட்ட முனையாமல் அரசை தண்டனையிலிருந்து காப்பற்றவே உழைத்துவருவதன்மூலம், மனித உரிமைமீறல்களுக்கும் பாரிய அத்துமீறல்களுக்கும் பலியானவர்களுக்கான நீதியையோ பொறுப்புக்கூறலையோ வழங்குவதற்கு அது விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையிலே, இலங்கை தனது மக்களுக்கும் அனைத்துலக குமுகத்திற்குமான தனது கடமையிலிருந்து பின்வாங்கியிருப்பதானது, அனைத்துலக சுயாதீனமான நீதிக்கான பொறிமுறையொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை முன்வைக்கவேண்டும் எனக்கோரிக்கைவிடுவதைவிட வேறெந்தத் தெரிவையும் எம்முன் விட்டுவைக்கவில்லை.
திட்டமிட்ட இனவழிப்புக்கு முகங்கொடுத்தும், ஏறக்குறைய முன்று தசாப்தங்கள் தொடர்ந்த போரால் பாதிக்கப்பட்டும் உள்ள தமிழ் மக்கள் தங்களுக்குச் சேரவேண்டிய நீதியைப் பெற்றுக்கொள்வது அவசியம். நீதியும் பொறுப்புக்கூறலும், மீள்நிகழாமைக்கான உத்தரவாதம், பாதுகாப்புத்துறைச் சீரமைப்புகளும் அரசமைப்புச் சட்டச் சீரமைப்புகளும், இழப்பீட்டு மீள்வழங்கல் ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதே நிலைமாறு நீதி.
போரின் பின்னரான நிர்வாகத்தினரையும் சீர்தூக்கி ஆராயவேண்டுமெனத் தமிழர் உரிமைக்கான குழுமம் கோருகிறது. மாநிடத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், பாலியல் மற்றும் பால்சார் வன்முறைகள், சித்திரவதைகள் போன்ற குற்றங்களை இலங்கை அரசபடை அங்கத்தவர்கள் புரிந்துள்ளார்களென ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாலும் அவர்களில் பலர் உயர் நிலை அரச பதவிகளையும் இராஜதந்திரப் பதவிகளையும் வகித்துவருகிறார்கள்.