2020-24க்கான எமது தளத்தகைசால் செயற்திட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கான நிலைமாறு நீதியையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிசெய்வதோடு, இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களினதும் குறிவைத்துத்தாக்கப்படும் குமுகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதென தமிழர் உரிமைகள் குழுமம் திடம் பூண்டுள்ளது. 2009லே போரின் இறுதிக்கட்டத்திலே நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கும் மட்டுமன்றித் தமிழ் மக்கள்மீதான திட்டமிட்ட இனவழிப்புக்கும் நீதியும் பொறுப்புக்கூறலும் பெறப்படவேண்டியதன் அவசர அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள பட்டறிவுமிக்க பரிந்துரையாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கும், தாயகத்திலும் புலத்திலும் வளர்ந்துவரும் இளம் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான திடகாத்திரமான ஒத்துழைப்புக்கான வெளியாக தமிழர் உரிமைகள் குழுமம் இயங்குகிறது.
தற்போதைய இலங்கை அரசானது 2015ல் தானும் கைச்சாத்திட்ட ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியுள்ளதுடன், தண்டனைப்பயமற்றதும் இன-மத தீவிரவாதம் தளைத்தோங்குவதுமானதொரு சூழலினால் ஆக்கவளம் பெறுகிறது. எனவே தமிழர் உரிமைகள் குழுமமானது, உலகளாவிய சட்ட ஆட்சியினதும் அனைத்துலகச் சட்டங்களினதும் ஊடாக ‘சட்டப்போர்’ பொறிமுறைகளைக் கையாண்டு, நிலைமாறு நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்ல முனைகிறது. நிலைமாறு நீதியைப் பெறும் எமது நோக்கில் முன்னேற்றங்கண்டு, இலங்கை அரசின் தொடரும் ஆதிக்கவாத செயற்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் அதைப் பொறுப்புக்கூறவைக்கவென, நாம் மனித உரிமைகளையும், நீதியையும், பன்முகத்தன்மையையும் மதிக்கும் நாடுகளுடனும் ஏனைய அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்பாடி, நெருங்கிப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். அத்தோடு, கட்டமைப்புரீதியான சீரமைப்புகளை முன்னெடுக்கவும், மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கவும், தமது உரிமைகள் பற்றியும் சட்டப்பொறிமுறைகள் பற்றியும் மக்களுக்கு அறிவூட்டவும், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு தம்மை எதிர் நோக்கும் சவால்களுக்கும் சிக்கல்களுக்கும் அரசியற்தீர்வுகளை எட்டுவதற்கான தளமமைத்துக்கொடுப்பதற்குமென இலங்கையிலே பொதுமக்கள் சுதந்திரங்களுக்கான சங்கமொன்றை நிறுவவும் நாம் விழைகிறோம்.
இந்தத் தளத்தகைசால் செயற்றிட்டமானது, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் அடுத்த நான்கு வருடங்களுக்கான செயற்பாடுகள்பற்றிய விபரங்களை வழங்குவதோடு, குழுமம் இந்தக் காலகட்டத்திலே செயற்படுவதற்கும் வளர்வதற்குமான வழிவகைகளிற்கான எட்டக்கூடிய இலக்குகளையும் நிறுவுகிறது. ஒவ்வொரு வருடத்திற்குமான செயற்பாடுகள்பற்றிய விரிவான விபரங்களை வழங்கும் வகையிலான வருடாந்த திட்டங்களைக் குழுமம் உருவாக்குவதோடு, இத்திட்டங்கள் நீண்டகால இலக்குகளையும் நோக்கங்களையும் எய்தும் வகையிலே கட்டமைக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யும். எமது செயற்பாடுகளின் தாக்கம்பற்றி அறிந்துகொள்ளவும் அவற்றை மேம்படுத்தவும் என குழுமம் அவ்வப்போது கண்காணிப்புகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளும். தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பணியானது தமிழர்களுக்கான நிலைமாறு நீதியைப்பெறுவதும், தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மற்றும் இலங்கையிலே ஒடுக்கப்பட்ட குமுகங்களின் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாத்தலும் ஆகிய எமது நோக்கங்களால் உந்தப்பெறுகிறது.